×

சுத்தம் சோறு போடும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

“சுத்தம் சோறு போடும்” என்பார்கள். நாம் எங்கும் தூய்மையை விரும்புகிறோம். உண்ணுமிடம் சுத்தமாக இருக்கவேண்டும் என நினைக்கிறோம். ஏன்.. கழிவை வெளியேற்றும் கழிவறைகள்கூட கடுஞ்சுத்தமாக இருக்கவேண்டும் என நினைக்கிறோம். இந்தத் தூய்மை இரண்டு வகைப்படும். ஒன்று புறத்தூய்மை. மற்றொன்று அகத்தூய்மை. புறத்தூய்மையானது நீரின்மூலமாக உண்டாகும். அகத்தூய்மையோ உண்மை என்ற ஒப்பற்ற குணத்தினால் உண்டாகும். இதை,

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும்
– என்கிறார், வள்ளுவர்.

எந்தவொரு பொருளையும் நீரை வைத்து சுத்தம் செய்வோம். ஆனால், இன்றோ அந்த நீரையே சுத்தம் செய்து பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது. ஆனால், மனத்தூய்மை என்பது உண்மையால் மட்டுமே உண்டாகும். வள்ளலார் இந்த உலகத்திற்கு வந்ததற்குக் காரணமே வெளிப்புறத்தில் தூய்மையானவர்களைப் போல நடித்துக் கொண்டு, உள்ளத்தில் கறுப்பர்களாக இருக்கும் வேடதாரிகளை மாற்றிடத்தான். அதற்காக இறைவனே தன்னை வரவழைத்தார் என்பதை,

“அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்து
இருந்த உலகோர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்து அடைவித்து அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்து
இருத்தற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் விடுவிக்க உற்றேன்”
– என்று பாடுகிறார்.

ஒருமுறை, வாரியார் சுவாமிகள் சாப்பிடுவதற்காகக் கீழே அமரும்போது வேட்டியில் அழுக்குப் படக்கூடாது என்பதற்காக வேட்டியை வழித்துக்கொண்டு உடம்பு தரையில் படும்வகையில் அமர்ந்தார். அதைப்பார்த்த அவருடைய தாயார், ‘ஏன் இப்படி அமர்கிறாய்?’ என்று கேட்டதற்கு, ‘வேட்டியில் அழுக்குப்பட்டுவிடுமே’என்றார். சிறுவனாக இருந்த வாரியார்சுவாமிகள், அப்போது அவருடைய தாயார், ‘உடையில் அழுக்குப்படாமல் அதை நான் துவைத்துக் கொடுப்பேன், ஆனால் உள்ளத்தில் அழுக்குப்பட்டால் பார்த்துக்கொள்’ என்றாராம், அவரின் தாயார். அன்றுமுதல் தன் வாழ்நாள் இறுதிவரையில் உள்ளத்தில் அழுக்குப்படாமல் இருக்க ஒரு பொய்கூட சொல்லவில்லையாம், வாரியார் சுவாமிகள்.

இன்று நாம் இறைவனை வழிபடுவதற்கு உடல்தூய்மை உடையவர்களாகச் செல்கிறோமே தவிர, உள்ளத்தூய்மை உடையவர்களாகச் செல்வதில்லை. வழியில்லாத வழியில் சென்று இறைவனை வழிபட வேண்டும் என்று நினைக்கிறோம். குறுக்கு வழியில் கடவுளைக் கும்பிட வேண்டும் என்றே நினைக்கிறோம். அண்மையில் அறநிலையத்துறையில் தலவரலாறு பதிப்பிக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அச்செய்தி வெளியானதும், சில நண்பர்கள் வாழ்த்துகூட தெரிவிக்கவில்லை.

மாறாக, தாங்கள் பரிந்துரைக் கடிதம் வழங்கினால் எளிமையாக இறைவனை வழிபடலாமா? என்று கேட்டனர். இறைவனை நேர்மையாக வழிபடலாம் என்ற எண்ணமே இல்லாத அவர்களை என்னென்று நினைப்பது. நேர்வழியில் இறைவனை வழிபடுவதுதான் உத்தமம். குறுக்கு வழியில் கும்பிடுவதைவிட, கும்பிடாமல் இருப்பதே நல்லது. ஒருமுறை நாடுமுழுவதும் ஒரு கொடிய நோய் பரவியிருந்த நேரம். அப்போது ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குள் செல்வதற்கே அதிகமான கெடுபிடி.

நோய் பரவியிருக்கிற ஊர்க்காரர்கள் இன்னொரு ஊருக்குள் சென்றுவிடமுடியாது.அப்போது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், பாட்டனார் சிவத்திரு சாமியண்ணா அவர்கள், தன் நண்பர்களுடன் திருவண்ணாமலை தீப தரிசனத்திற்காகச் சென்றார். ஊர் எல்லையில் சோதனையில் ஈடுபட்டிருந்த சிலர், `நீங்கள் எந்த ஊர்? அங்கு நோய் பரவல் இருக்கிறதா?’ என்று கேட்க, சில நண்பர்கள் ஊர்ப் பெயரை மாற்றிச் சொல்லி, அங்கு நோய் பரவல் இல்லை என்று சொல்லித் திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டனர். ஆனால், சாமியண்ணா மட்டும்தான், காங்கேயநல்லூர் என்றும், அங்கு நோய் பரவல் இருக்கிறது என்றும் சொல்லித் திருவண்ணாமலைக்குள் போகவில்லை.

தீப தரிசனம் முடிந்து ஊருக்கு வந்த நண்பர்கள், சாமியண்ணாவிடம், `என்னப்பா! எவ்வளவு தூரம் நாங்கள் பாதயாத்திரையாகச் சென்றோம். எங்களைப் போலவே ஊர்ப் பெயரை மாற்றிச் சொல்லி வழிபட வந்திருக்கலாம் அல்லவா?’ என்று கேட்டபோது, `பொய் சொல்லித் தீபத்தைக் காண்பதைவிட, உண்மையைச் சொல்லி தீபத்தைக் காணாமல் இருப்பதே மேல்’ என்றாராம் சாமியண்ணா. இவரை நினைக்கும்போது,

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு.

– என்ற திருக்குறள்தான்நினைவுக்கு வருகிறது.

சாமியண்ணா அவர்களுடன் சென்றவர்கள் பொய்சொல்லி அந்த மகாதீபமாகிய விளக்கைப் பார்த்தவர்களெல்லாம் உண்மையிலேயே தீபத்தைப் பார்த்தவர்கள் அல்லர். சாமியண்ணா, அவர்கள்தான் உண்மையிலேயே உண்மையாலேயே விளக்கைப் பார்த்தவர் ஆவார். ஆம், குறள் வழியில் சான்றோர்களுக்குப் பொய்சொல்லாமைதானே உண்மையான விளக்கு. பொய் சொல்லாமல் உண்மையைப் பேசுபவர்களின் உள்ளத்தில்தான் இறைவன் எழுந்தருளுகிறான்.

“பொய்யாமல் நின்று புகழ்வார்கள் மனத்துள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கொத்த தேவர் பிரான்”
– என்கிறார் சுந்தரமூர்த்தி நாயனார்.

உள்ளத்தால் உண்மையாக நடந்து கொள்பவர்களின் உள்ளம்தான் இறைவனின் உறைவிடம். அவர்களின் அங்கங்கள்தான் ஆங்காங்கே இருக்கும் ஆலயங்கள். அவர்களின் வாயிலிருந்து வாய்மையே வெளிப்படுவதால், அந்த வாயே, கோயிலுக்கு முன் இருந்து வரவேற்கும் கோபுரவாயில். சிந்தாமல் சிதறாமல் இறைவனையே சிந்திக்கும் அவர்களின் ஒவ்வொரு புலன்களும் ஒளிவீசும் விளக்குகளாம்.

இதை,
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காணா மணிவிளக்கே”
– என்கிறார் திருமூலர்.

நாம் உள்ளத்தளவில் உண்மையாக இருந்தால் போதும். இறைவனை ஊரெங்கும் தேடவேண்டியதில்லை என்பது திருமூலர் தரும் தெளிவு. வழிபாட்டைப் பொறுத்த மட்டில், புறத்தூய்மையைவிட அகத்தூய்மைதான் மிகவும் அவசியமானதாகும். இதை அருணகிரிநாதர் பாடும்போது, ‘‘அன்புடன் ஆசார பூஜைசெய்து’’ என்கிறார். ஆசாரமாகிய புறத்தூய்மை இரண்டாவதுதான். அன்பாகிய அகத்தூய்மைதான் முதல். ஆசாரம் என்பது வெளிப்புறத்தைச் சார்ந்தது. அது இரண்டாவதுதான். இன்னும்கூட சொல்லப் போனால், வெளிப் புறத்தூய்மை இல்லாமல் இருப்பது,அவ்வளவு பெரிய தவறல்ல.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

The post சுத்தம் சோறு போடும் appeared first on Dinakaran.

Tags : kumkum anmigam ,Dinakaran ,
× RELATED தெய்வம் ஒருபோதும் அருள்புரியத் தவறாது!